உலக அமைதிக்காக ஒரு காகிதக் குரல்: 85,000 ஓரிகாமி அமைதிப் புறாக்களுடன் சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
சேலம், மே8, 2025: உலக அமைதிக்கான ஓர் அழைப்பாகவும், மாணவர்களின் ஒற்றுமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் ஒளியாகவும், சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் மாணவ மாணவிகள் உருவாக்கிய 85,000 ஓரிகமி அமைதிப் புறாக்கள் உலக சாதனையைப் பதித்து, ஒரு வரலாற்றுப் புதிய பக்கம் எழுதப்பட்டுள்ளது. DCB உலக சாதனை நிறுவனம் இந்த சாதனையை பரிசீலனை செய்து, அதற்கான சான்றிதழை வழங்கி கௌரவித்தது.
இந்நிகழ்வை செயலர் சு.அபர்ணா அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்துள்ளனர். அடுத்ததாக பேராசிரியர் தீபக்குமார் அவர்கள் தங்கள் கல்லூரியில் கலைக் குழுமத்தின் (Arts club) சாதனைகளை பட்டியலிட்டு இன்னும் பல்வேறு சாதனைகளைச் செய்யுமாறு வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் கீதா அவர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக உரையாற்றியுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக கலைவளர்மணி அன்புசெல்வன் அவர்களும், டிசிபி உலக சாதனை நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.சூரியா அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் கலைத்திறனையும் ஆர்வத்தைம் பாராட்டியுள்ளனர். டிசிபி உலக சாதனை புத்தகத்தில், இந்த சாதனையும் இடம்பெறும் என்று அறிவித்து உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கியுள்ளார்.நிகழ்வின் இறுதியாக செயலர் ப.சி. விஜய பிரசாந்த் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கலை, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாடாக ஓரிகமி:
9 செ.மீ x 9 செ.மீ அளவிலான வெள்ளை சதுரக் காகிதங்களை எடுத்து, 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல தினங்களாக காலம், உழைப்பு, ஆர்வம், நேர்த்தி மற்றும் மனக்குழப்பமில்லா ஒத்துழைப்புடன் அமைதியை சின்னமாகக் கொண்டு ஓரிகமி புறாக்களை மடித்தனர். ஒவ்வொரு புறாவும் வெறும் காகித மடிப்பு அல்ல – அது ஒற்றுமையின் சிந்தனை, தன்னலமின்மையின் செயல், மற்றும் உலக அமைதியின் ஏக்கம் எனும் மகத்தானச் செய்திகளைச் சுமந்து வருகிறது.
காட்சி வலையமைப்பும் பார்வையாளர்களின் ஈர்ப்பும்:
இந்த 85,000 ஓரிகமி அமைதிப் புறாக்கள் 400 சதுர மீட்டர் பரப்பளவில் காட்சிக்கு வைக்கப்பட்டன. பத்மஸ்ரீ முத்தையான் ஆடிட்டோரியம் ஒருநாள் முழுவதும் அமைதியின் கவிஞனாக மாறி, மாணவர்களின் இளம் மனங்களின் கனவுகளை சாட்சியமாக்கியது. பார்வையாளர்கள் மட்டுமல்ல, சமூக வலைதளங்கள் முழுவதும் இது ஒரு உன்னதமான நிகழ்வாகச் சுழன்றது.
சாதனையைப் பற்றிய கருத்துகள்:
GCE சேலம் கலைக் கழகம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், “அமைதிக்கான குரலைப் பரப்புவது” என்பதோடு, மாணவர்கள் கலை வழியாக சமூக மாற்றத்திற்கு தூண் ஆகமுடியும் என்பதையும் நிரூபித்தது. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரே நோக்கத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டதின் விளைவாக, ஒற்றுமையின் அழகும், சீர்மையுமான கூட்டு முயற்சியின் சக்தியும் வெளிப்பட்டது.
மாணவர்களின் மனப்பான்மையை பிரதிபலிக்கும் முயற்சி:
மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் சமூக நலனுக்கான ஆழ்ந்த கனவை இந்த முயற்சி காட்டுகிறது. இன்று அறிவியல், பொறியியல், தொழில்நுட்பத்தில் கற்றுக் கொள்கின்ற மாணவர்கள், சமுதாய விழிப்புணர்விலும் கலை திறனிலும் சிறந்து விளங்குவதற்கு இது ஓர் அழகான உதாரணம்.
ஒரே துண்டு வெள்ளைத் தாள்... ஆனால் அதில் மடிக்கப்பட்ட ஒவ்வொரு புறாவும் உலக அமைதிக்கான ஓர் மெளனமான அழைப்பாக மாறியது. இந்த மாணவர்களின் முயற்சி, உலகளாவிய மனிதத்துவத்தின் பிம்பமாகவும், ஒற்றுமையின் மொழியாகவும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டு உலக அமைதிவேண்டி பிராத்தனை செய்து நிகழ்வை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
